டிக்கெட் விலை உயர்வால், ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. பாட்னாவில் நடந்த இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவே அதற்கு சாட்சி.
‘புஷ்பா’ பாகம் ஒன்றை விட ‘புஷ்பா 2’ படத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார் இயக்குநர் சுகுமார். அதற்கேற்ப, படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது. ‘புஷ்பா’ முதல் பாகத்தின் பட்ஜெட் ரூ.250 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் ‘புஷ்பா 2’ படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதில், தமிழகத்தில் டிக்கெட் விலையில் ஏற்றம் இல்லை என்றாலும், மற்ற மாநிலங்களில் டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளது. டிக்கெட் விலை ஏற்றத்தால், “புஷ்பா 2” படத்தின் வசூலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதில் மும்பையில் மட்டும் “புஷ்பா 2” படத்தின் டிக்கெட் விலை 3000 ரூபாய் வரைக்கும் விற்றுவருவது பேசுபொருளாகியுள்ளது. அதுவே, கர்நாடகாவில் 1250, 700, 650 ரூபாயாகவும், ஆந்திராவில் 1200, 700, 350 ரூபாயாகவும் “புஷ்பா 2” படத்தின் டிக்கெட் விற்பனை ஆகி வருகிறது.
Also Read | 80 கிலோ எடை.. 6 வாரங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன ஆச்சு?
இவ்வளவு விலையேற்றம் இருந்தாலும் இதுவரை 12 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம்தான் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம். இந்தப் படத்தின் சாதனையை புஷ்பா 2 முறியடிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இதுவரை சுமார் ரூ.40 கோடி ரூபாயை ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூலித்துள்ளது. எனவே, இந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த ‘பாகுபலி’ படங்களின் சாதனையை இப்படம் விஞ்சினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறது சினிமா வட்டாரம்.
.