கான்பூர் டெஸ்ட் மூலமாக கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று புதிய சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக இருக்கும் அஸ்வின், கான்பூர் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் 2 விக்கெட் வீழ்த்தியதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்று எடிசன்களிலும் 50 விக்கெட்கள் வீழ்த்திய ஒரே பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார். நேற்று நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் 9 ரன்கள் எடுத்திருந்த ஷகிப் அல் ஹசனை வீழ்த்தியது மூலம் உலகின் முதல் பந்து வீச்சாளராக அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் அஸ்வின். அவர் இதுவரை 185 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதல் இடத்தில் 187 விக்கெட்களுடன் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் உள்ளார். நாதன் லயனை முந்த இன்னும் 3 விக்கெட்களே அஸ்வினுக்கு தேவை. வரவிருக்கும் நியூசிலாந்து தொடரில் அவர் இந்த சாதனையை முறியடிப்பார் என நம்பலாம்.
அஸ்வின், 2019 – 21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட்களும், 2021 – 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 13 போட்டிகளில் 61 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். தற்போது நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டிகளில் இதுவரை 53 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
இன்னொரு சாதனையும் முறியடித்த அஸ்வின்: நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய சாதனையை அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியிலேயே முறியடித்துள்ளார். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலராக 51 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்தில் இருந்தார்.
Also Read |
வங்கதேச பவுலிங்கை துவம்சம் செய்த இந்திய அணி… டெஸ்ட் போட்டிகளில் புதிய ரிக்கார்ட்
வங்கதேசத்துக்கு எதிரான ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 53 விக்கெட்களை வீழ்த்தி ஹேசில்வுட் சாதனையை முறியடித்தார்.
நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 53
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) – 51
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) – 48
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 48
கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) – 43
நாதன் லியோன் (ஆஸ்திரேலியா) – 43
இதேபோல், வங்கதேசத்துக்கு அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய ஜாகீர்கான் சாதனையும் அஸ்வின் இன்றைய போட்டியின் மூலமாக முறியடித்தார். வங்கதேசத்துக்கு அணிக்கு எதிராக ஜாகீர்கான் 31 விக்கெட்களை வீழ்த்தியிருக்க, அஸ்வின் 34 விக்கெட்களை வீழ்த்தினார்.
.