பவிஷ் அகர்வாலின் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய ஆஷிஷ் தாக்கூர், இப்போது ரூ.1,18,000 கோடி மதிப்புள்ள மற்றொரு முன்னணி நிறுவனத்தில் இணைந்துள்ளார். ஓலா எலெக்ட்ரிக்கில் சேர்வதற்கு முன்பாக, ஆஷிஷ் தாக்கூர் மாருதி சுசூகியில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்தார். இவருக்கு 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் உள்ளது.
பவிஷ் அகர்வாலின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் குளோபல் சர்வீஸ் தலைவர் மற்றும் மூத்த இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, ஆஷிஷ் தாக்கூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆஷிஷ் தாக்கூர், ஓலா நிறுவனத்தில் சுமார் 2.8 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஓலாவின் சேவைத் துறைக்கு அடித்தளமிட்டவரான இவர், டிரைக்ட் டு கஸ்டமர் (D2C) வணிக மாதிரியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மார்ச் 2022 இல் ஓலாவில் இணைந்த ஆஷிஷ் தாக்கூருக்கு, 26 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இப்போது ரூ.1,18,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், சேவை மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு (எலெக்ட்ரிக் வாகனத்திற்கான தொழிலில்) பிரிவில் இணை துணைத் தலைவராக பணியாற்றுகிறார். டிவிஎஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான, டிவிஎஸ் மோட்டார்ஸ் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஓலாவில் சேருவதற்கு முன்பு, ஆஷிஷ் தாக்கூர் மாருதி சுசூகியுடன் 23 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்ததாக அவரது லிங்க்ட்இன் பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் 1999 இல் மாருதி சுசூகி நிறுவனத்தில் பிராந்திய சேவை மேலாளர் நிர்வாகியாக சேர்ந்தார் மற்றும் நாட்டின் பல பிராந்தியங்களில், பிராந்திய மற்றும் மண்டல சேவைத் தலைவராகவும் பணி உயர்த்தப்பட்டார்.
பஞ்சாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான ஆஷிஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அவர் 1988 இல் ஐஎஸ்ஜிஈசி (ISGEC) ஹெவி இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த அக்டோபர் 2024 இல் அவர் ஓலாவில் இருந்து வெளியேறினார். அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விற்பனைக்குப் பிந்தைய சேவை சிக்கல்கள் தொடர்பான வாடிக்கையாளர் புகார்களின் எண்ணிக்கையை குறித்த மத்திய விசாரணை உள்ளிட்ட காரணங்களால் அவரது தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சேவை சிக்கல்களை கையாள்வதற்கு ஏதுவாக, ஓலா எலெக்ட்ரிக், டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் 3,200 புதிய ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களைச் சேர்க்கும் லட்சிய விரிவாக்கத் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது.
.