Last Updated:
ரஷ்யாவின் கிரோன்ஸி நகரம் அருகே உக்ரைனிய டிரோன் தாக்குதல்கள் இருந்ததால் தங்கள் பாதுகாப்புப்படை அதனை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அஜர்பைஜான் அதிபரிடம் புடின் விளக்கியுள்ளார்.
கஜகஸ்தானில் நடந்த விமான விபத்துக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கோரியுள்ளார்.
கஜகஸ்தானில் விமானம் விழுந்த சம்பவத்தில் அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 25 ஆம் தேதி அஜர்பைஜானின் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் கிரான்ஸி பகுதிக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. ரஷ்யாவுக்கு செல்லாமல் அந்த விமானம் கஜகஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், கஜகஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விமானம் விழுந்து நொறுங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்திற்கு காரணம் முதலில் பறவை தாக்கியதாக கூறப்பட்டது. ஆனால் கிரான்ஸியில் தரையிறங்காமல் விமானம் வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது ஏன் என்று இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், விமான விபத்து குறித்து அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ரஷ்ய வான் பரப்பில் நடந்த சம்பவம் துயரமானது எனக்கூறி இரங்கல் தெரிவித்த அதிபர் புதின், விபத்திற்காக மன்னிப்புக் கோரியதாக கிரெம்ளின் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் கிரோன்ஸி நகரம் அருகே உக்ரைனிய டிரோன் தாக்குதல்கள் இருந்ததால் தங்கள் பாதுகாப்புப்படை அதனை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அஜர்பைஜான் அதிபரிடம் புடின் விளக்கியுள்ளார். எனினும் விமானத்தை தங்கள் தரப்புதான் சுட்டதாக ரஷ்ய அதிபர் புடின் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
December 29, 2024 9:44 AM IST