நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 200 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும் மழை வெள்ளம் காரணமாக நாட்டின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 103 பிரதேச செயலக பிரிவுகளில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
ஆறு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 265 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அந்நிலையம் தெரிவித்தது. இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி யுள்ளதால், இன்றைய தினம் அது சூறாவளியாக உருவெடுக்க இடமுண்டு என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் நேற்றுப் பிற்பகலுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், அம்பாறை மாவட்டத்தில் 311.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடைபட்டிருந்தன. இதனால் சில வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
கடும் மழையினால் ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவால், கொழும்பு பதுளைக் கிடையிலான இரவு தபால் ரயில் சேவை நேற்று ரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,புத்தளம், கேகாலை,இரத்தினபுரி, காலி, திருகோணமலை, பதுளை மாவட்டங்கள் கடும் காற்றுடன் கூடிய மழை, வெள்ளம், மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாத்திரம் 12,485 குடும்பங்களைச் சேர்ந்த 43,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் 317 குடும்பங்களைச் சேர்ந்த 1141 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1696 பேர் 20 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 1159 குடும்பங்களைச் சேர்ந்த 4178 பேர், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா,கந்தப்பளை பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா,கந்தப்பளை பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் நேற்றுக்காலை காலை முதல் அந்த வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை, நுவரெலியா விக்டோரியா பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீடுகள் நீரினால், மூழ்கியுள்ளதாக அந்த மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஹற்றன்- கொழும்பு பிரதான வீதி, ஹற்றன் நுவரெலியா ஊடாக செல்லும் குறுக்கு வீதிகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அத்துடன் மாத்தளை கொடுவேகெதர வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கடும் மழை காரணமாக அனைத்து சிறு குளங்களிலும் நீர் நிரம்பி வழிவதால் வடக்கில் முக்கிய எட்டு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வவுனியாவில் இரண்டு குளங்கள் செட்டிக்குளம் பிரதேச குளங்கள் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு உள்ளிட்ட சில குளங்கள் உடைப்பெடுப்பதை தவிர்க்கும் வகையில், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மணல் மூடைகளை உபயோகித்து பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளில் வெளியேறும் நீரினால் வவுணதீவுக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான வவுணதீவு பாலத்தில் வெள்ளம் அதிகரிக்கலாம் என மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனை அண்டிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post கடும் மழை, சீரற்ற கால நிலை இயற்கை அனர்த்தங்களால் ஒருவர் பலி; 77,670 பேர் பாதிப்பு appeared first on Thinakaran.