- 03 பொலிஸார் காயம்; ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
- நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதாகி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு
பெலவத்தை கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலிருந்து வருகைத்தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் முயன்றபோது, போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸார் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில், ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் அடங்குகின்றனர். அவர்களில் இருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் அல்லது பிளேடுகளால் வெட்டியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கைதுசெய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இணை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
The post கல்வியமைச்சு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் appeared first on Thinakaran.