இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போட்டியை வெல்ல இந்திய அணி 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4 ஆம் நாளான நேற்று, வங்கதேச அணி 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கடைசி நாளான இன்று, வங்கதேசத்தை குறைந்த ஓவருக்குள் வீழ்த்துவது, அல்லது, எதிரணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டி, வெற்றி அடைய இந்தியா வியூகம் வகுத்து விளையாடியது.
அதே சமயம், விக்கெட்களை பறிகொடுக்காமல், ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்தும் திட்டத்துடன் வங்கதேசம் விளையாடியதால், கடைசி நாளான இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. வங்கதேசத்தின் வியூகத்தை இந்திய பவுலர்கள் தகர்த்தெறிந்தனர். கடந்த இன்னிங்ஸில் சதம் அடித்த மொமினுல் ஹக்கை, நாளின் தொடக்கத்திலேயே இரண்டு ரன்களுக்கு அவுட் செய்தார் அஸ்வின்.
தொடர்ந்து கேப்டன் நஜ்முல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த, மறுபக்கம் இருந்த வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அரை சதம் அடித்தார். அரை சதம் முடித்த கையோடு அவரை ஆகாஷ் தீப் பெவிலியன் அனுப்பி வைத்தார்.
Also Read |
வங்கதேச பவுலிங்கை துவம்சம் செய்த இந்திய அணி… டெஸ்ட் போட்டிகளில் புதிய ரிக்கார்ட்
இதன்பின் ஜடேஜாவும் பும்ராவும் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த, வங்கதேசம் தடுமாறியது. இதனால் 130 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அப்போது சீனியர் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனி ஒருவராக அணியை மீட்க போராடினார்.
ஆனால், அவரின் போராட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 37 ரன்கள் எடுத்திருந்த அவரை, பும்ரா க்ளீன் போல்ட் ஆக்கினார். இதனால் வங்கதேச அணி 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 ரன்களை இந்திய அணி எடுக்கும் பட்சத்தில் போட்டியை வெல்வதோடு, தொடரையும் கைப்பற்றும்.
இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
.