இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் தற்போதைய உடல்நிலை குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ச்ரேக்கரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர், பிரவீன் ஆம்ரே, பல்விந்தர் சிங் சாந்து மற்றும் சஞ்சய் பங்கார் ஆகியோருடன் மேடையில் கலந்து கொண்ட வினோத் காம்ப்ளி உடல் ரீதியாக பலவீனமாக காணப்பட்டார். நிகழ்ச்சியின் போது, தனது சிறுவயது நண்பர் டெண்டுல்கரை தழுவிக்கொண்டு நிற்கும் காம்ப்ளியின் வீடியோ மிகவும் வைரலானது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

காம்ப்ளியின் சிரமங்கள் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. மதுப்பழக்கத்தால், கிரிக்கெட் வட்டாரத்தில் பல நண்பர்களுடன் அவருக்கு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. குடிப்பழக்கத்தால் அவரது உடல்நிலை தற்போது மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்” – வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை… உணர்ச்சிவசப்பட்ட பி.வி.சிந்து!

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தானேயில் உள்ள அக்ரிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​அவருக்கு காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருந்ததாகவும், அவரால் உட்காரக் கூட முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில், சிறுநீரக தொற்றும் தசை பிடிப்பும் இருப்பதை மட்டுமே வினோத் காம்ப்ளி எங்களிடம் தெரிவித்தார் என்று மருத்துவர் விவேக் திரிவேதி ஊடகங்களிடம் பேசியுள்ளார்.

பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில் வினோத் காம்ப்ளி மூளையில் இரத்தம் உறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Also Read | நம்பர் 8ல் இறங்கி சதம் அடிக்கும் திறமை.. அஸ்வினுக்கு மாற்றாக அணியில் இடம்பிடித்த இளம் வீரர் யார்?

அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் மருத்துவ பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். காம்ப்ளிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை தரப்பு முடிவு செய்துள்ளது என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் பூரண நலமுடன் இருப்பதாகவும் சில நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக வினோத் காம்ப்ளிக்கு மூளை பகுதியில் கட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது ஏற்கனவே இருந்த கட்டி என்றும் புதிதாக ஏதும் கட்டிகள் உருவாகவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மருத்துவமனை மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள வினோத் காம்ப்ளி, இலவச சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, ”இன்று நான் உயிரோடு இருப்பதற்கு மருத்துவர்களே காரணம்” என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.



Source link