7 உயிர்களை காவு கொண்டுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் என 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 26ஆம் திகதி மத்ரஸா பாடசாலை முடிந்து மேற்படி மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாத நிலையில் மத்ரஸாவின் அதிபர் குறித்த உழவு இயந்திரத்தில் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் வழங்கியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என்பதால் மாணவர்கள் அந்த உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்டதுடன், 6 பேர் நீரில் மூழ்கி காணாமற் போயிருந்தனர். 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே காணாமற் போயிருந்தனர்.
அதற்கிணங்க 5 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
The post காரைதீவு விபத்து; மத்ரஸா அதிபர் உட்பட நால்வர் கைது appeared first on Thinakaran.