சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான ஜுஹாயில் உள்ள விளையாட்டரங்கிற்கு வெளியே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது ஃபேன் வேய்சியோ (62 வயது) என்ற நபர் காரை வேகமாக செலுத்தி மோதியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதற்கு சில நாட்களுக்கு கழித்து நடந்த வேறு ஒரு தாக்குதலுக்கு காரணமான மற்றொரு நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்தது.
ஷூ ஜியாஜின் (21 வயது) என்ற அந்த நபர் கிழக்குப் பகுதி நகரான வூக்சியில் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் பார்ப்போரையெல்லாம் கத்தியால் தாக்கி, 8 பேரை கொலை செய்திருந்தார்.
தனது விவாகரத்திற்கு பிறகு தனது சொத்துகள் பங்கு போடப்பட்ட விதம் குறித்த அதிருப்தியால் ஃபேன் செயல்பட்டதாகவும், மோசமான தேர்வு முடிவுகளால் தனது பட்டப்படிப்பை முடியவில்லை என்ற கோபத்தில் ஜியாஜின் தாக்குதலை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றம் மரண தண்டனை விதித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஃபேனின் மரண தண்டனை திங்கட்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.