தாய்லாந்து – மியான்மர் எல்லையில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் ஆழ்துளைக் கிணற்றில் மூன்று நாட்களாக சிக்கிக் கொண்ட விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து ஊடக அறிக்கையின்படி, அருகிலுள்ள காட்டில் இருந்து சில விசித்திரமான அலறல்களை கிராமவாசிகள் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அந்த ஒலிகளை பேய் ஒலிகள் என்று தவறாக நினைத்துக் கொண்டதால் அங்கு செல்ல முயற்சிக்கவில்லை. தொடர்ந்து சத்தம் வரத் தொடங்கியதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒலியின் சத்தத்தை கண்டறிந்த போலீசார் , 22 வயதான லியு சுவானி என்ற இளைஞர், 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றின் அடிப்பகுதியில் விழுந்துவிட்டதைக் கண்டுபிடித்ததாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, கிணற்றில் இருந்து லியு சுவானி மீட்கப்பட்டார். மூன்று நாட்கள் இரவும் பகலும் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த சுயானி மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டார் மற்றும் பலத்த காயங்களுடன் இருந்தார். சுயானியின் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் அவரது தலை மற்றும் பிற இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இதுமட்டுமின்றி உடலில் பல இடங்களில் கீறல்கள் இருந்தன. 30 நிமிட மீட்புப் பணிக்கு பின் வெளியே எடுக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுயானியின் கூற்றுப்படி, அவர் மூன்று நாட்கள் அங்கேயே சிக்கிக் கொண்டார், மேலும் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு உத்தியைப் பயன்படுத்தினார். அதாவது, தனது ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை உதவிக்காக கத்தினார். இதற்கிடையில், காட்டில் இருந்து வினோதமான அலறல் சத்தம் கேட்டதாக அருகில் உள்ள கிராம மக்கள் தெரிவித்தனர். இரவில் சத்தம் அதிகமாகிவிட்டதாகவும், இதனால் அச்சமடைந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். பேய் அல்லது மந்திரவாதியின் வேலை என்று கருதி இரவில் வீட்டை விட்டு வெளியே வருவதை நிறுத்தியதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
காட்டில் இருந்து வெளியே வர முயன்றபோது தவறுதலாக லியு கிணற்றில் விழுந்ததாக போலீசார்கள் தெரிவித்தனர். தாய்லாந்து-மியான்மர் எல்லையில் லியு இருப்பதும், அவர் எப்படி அங்கு வந்தார் என்பதும் மர்மமாகவே உள்ளது. எனவே அவர் அந்த பகுதிக்கு எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உள்ளூர் அதிகாரிகள் கிணறுகளை மூடுவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த சம்பவம் ஆனது சீன சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
.