– பாடசாலை வளாகத்தில் நின்ற பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று (26) செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை (27) ஆகிய தினங்களில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த (உ/த) பரீட்சை நிலையங்களாக அமையாத அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றேன்.

பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும்.

சீரற்ற வானிலைக்கு மத்தியில், 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை வழங்கப்பட்டள்ளதாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகள் மூன்றம் தவணையின் முதல் கட்ட விடுமுறைக்காக கடந்த நவம்பர் 22ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலைகள் 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக 2024 ஜனவரி 02ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடசாலை வளாகத்தில் நின்ற பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில் நின்ற பாரிய மரமொன்று இன்று (26) செவ்வாய்க்கிழமை அதிகாலை முறிந்து வீழ்ந்துள்ளது.

 அதிகாலை வீசிய பலத்த காற்றினால் இந்த மரம் முறிந்து வீழ்ந்ததாக பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிலையமாகவும் செயற்படுகின்றது.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், நகர சபை ஊழியர்கள் ஸ்தலத்திற்கு அனுப்பியதையடுத்து குறித்த மரம் நகர சபை ஊழியர்களினால் வெட்டி அகற்றப்பட்டதாக பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தெரிவித்தார்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

The post கிழக்கில் இன்றும் நாளையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை appeared first on Thinakaran.



Source link