இந்த நடவடிக்கைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், அதிகப்படியான திரை நேரம் மற்றும் உட்கார்ந்தபடியே நேரத்தை கழிக்கும் சோம்பேறித்தனமான நடத்தைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதன்படி பிப்ரவரி 1 முதல், 18 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு திரைப் பயன்பாட்டைத் தடைசெய்யும் விதிகளை பாலர் பள்ளிகள் அமல்படுத்தும். அதேப்போல் 18 மாதங்கள் முதல் ஆறு வயதுடையவர்களுக்கான திரை நேரத்தை, கற்பித்தல் மற்றும் கற்றல் நோக்கங்களுக்காக மட்டுமே கட்டுப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின்படி, நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்துதல் மற்றும் உட்கார்ந்திருப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களை விட “அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு” முன்னுரிமை அளிக்க கல்வியாளர்கள் வழிகாட்டப்படுவார்கள்.
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றன. மாணவர்கள் இனிமேல் வகுப்பு நேரத்தில் தங்கள் தொலைபேசிகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் வைக்க வேண்டும். கற்றல் நடவடிக்கைகளின் போது கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இடைவேளையின் போது அல்லது பள்ளி நேரம் முடிவடைந்த பிறகு என குறிப்பிட்ட நேரங்கள் மற்றும் இடங்களில் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்த முடியும்.
பள்ளி விதிமுறைகளை தாண்டி, சுகாதார அமைச்சகமும் திரை நேரம் தொடர்பாக பெற்றோருக்கான பரிந்துரைகளை புதுப்பித்துள்ளது. அதன்படி, மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிப் பணிகளைத் தவிர்த்து, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே மொபைலைப் பயன்படுத்த வேண்டும். ஏழு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளி தொடர்பான பணிகளைத் தவிர்த்து, திரை நேரம் தினமும் இரண்டு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகப்படியான பயன்பாட்டுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க, மொபைல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் தங்கள் குழந்தைகளின் அணுகலைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி, மொழித் திறன், மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் சிங்கப்பூர் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தாலும், நீடித்த திரைப் பயன்பாடு மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
தற்போது, இந்த முயற்சி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மையப்படுத்தினாலும், எதிர்காலத்தில் முதியோர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாக சிங்கப்பூர் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அதிகப்படியான திரைப் பயன்பாடு மற்றும் சோம்பேறித்தனமான நடத்தையின் எதிர்மறையான தாக்கங்களைத் தடுப்பதை சிங்கப்பூர் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரிவான நடவடிக்கைகள், அதன் இளைய தலைமுறையினருக்கு நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
January 27, 2025 9:10 PM IST