கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்க வேண்டுமா? அல்லது ரிவார்டு கிரெடிட் கார்டு வாங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்வது உங்களுடைய செலவு செய்யும் பழக்கங்கள், பொருளாதார இலக்குகள் மற்றும் நீங்கள் என்ன மாதிரியான பலன்களை பெற விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து அமையும். இந்த இரண்டு வகையான கார்டுகளுமே தனித்துவமான நன்மைகளை அளிக்கின்றன. எனவே உங்களுக்கான சரியான ஒன்றை தேர்வு செய்வதற்கு உதவும் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?:
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் மூலமாக நீங்கள் செலவு செய்யும் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கேஷ்பேக்காக மீண்டும் பெறலாம். இந்த கேஷ்பேக் வழக்கமாக உங்களுடைய அக்கவுண்டில் ஸ்டேட்மென்ட் கிரெடிட், டைரக்ட் டெபாசிட் அல்லது செக் மூலமாக வழங்கப்படும்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டு யாருக்கு ஏற்றது?:
எளிமையை விரும்பும் நபர்கள் மற்றும் உடனடி பொருளாதார பலன்களை எதிர்பார்ப்போருக்கு இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உதாரணமாக உங்களுடைய கார்டை பயன்படுத்தி நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2% கேஷ்பேக் என்ற வீதத்தில் ₹2 உங்களிடமே திருப்பி கொடுக்கப்படும்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்:
இதில் எந்த ஒரு சிக்கலான அமைப்பும் இல்லை. உடனடியாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பணமாக பெறுவீர்கள். இந்த பணத்தை நீங்கள் எந்த ஒரு செலவிற்காகவும் பயன்படுத்தலாம். மளிகை சாமான், பில்கள், எரிபொருள் போன்ற செலவுகளுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளின் குறைகள்:
ரிவார்டு பாயிண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது கேஷ்பேக் விகிதங்கள் குறைவாக இருக்கலாம்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?:
ரிவார்டு கிரெடிட் கார்டுகள் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பாயிண்டுகள், மைல்கள் அல்லது பிற ரிவார்டுகளை வழங்கும். இந்த பாயிண்ட்களை பயன்படுத்தி நீங்கள் டிராவல், ஷாப்பிங், டைனிங் அல்லது பிற அனுபவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள் யாருக்கானது?:
அதிகபட்ச சலுகைகள் மற்றும் புத்திசாலித்தனமாக தங்களுடைய பாயிண்டுகளை ரெடீம் செய்ய நினைக்கும் நபர்களுக்கு இது ஏற்றது. உதாரணமாக நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு பாயிண்டை பெறுவீர்கள். இந்த ஒரு பாயிண்டை பயன்படுத்தி ₹0.50 மதிப்பிலான டிராவல் பலன்களை பெறலாம்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்:
இந்த பாயிண்டுகளை நீங்கள் டிராவல், ஷாப்பிங், கிஃப்ட் கார்டுகள் அல்லது பிரத்தியேகமான அனுபவங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரெடீம் செய்யும் பொழுது அது உங்களுக்கு அதிக பலன்களை பெற்றுத் தரும். பல கார்டுகள் ஏர்போர்ட்டில் இலவச லான்ச் அணுகல், டிராவல் இன்சூரன்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகின்றன.
ரிவார்டு கிரெடிட் கார்டுகளின் குறைகள்:
பாயிண்டுகளை ரிடம்ஷன் செய்வதற்கான விதிகளை புரிந்து கொள்வது சற்று சிக்கலான விஷயமாக அமைகிறது. ஒரு சில ரிவார்டு புரோகிராம்களில் பாயிண்டுகளுக்கு காலாவதி தேதி வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் அதனை ரெடீம் செய்யாவிட்டால் வீணாகிவிடும். மேலும் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே அதிக பாயிண்டுகள் வழங்கப்படும்.
உங்களுக்கான சரியான கார்டை தேர்வு செய்வது எப்படி?:
*நீங்கள் அதிகமாக மளிகை சாமான், எரிபொருள் மற்றும் பில்களுக்கு பணத்தை செலவு செய்யும் நபர் என்றால் உங்களுக்கு கேஷ்பேக் சிறந்ததாக இருக்கும். அதே சமயத்தில் நீங்கள் அதிக பயணம் மேற்கொள்ளக்கூடிய ஒருவர் அல்லது ஹோட்டல்களில் தங்கும் ஒரு நபர் என்றால் உங்களுக்கு ரிவார்டு கார்டு சிறந்தது.
*எந்தவிதமான சிக்கல் நிறைந்த ரிவார்டு சிஸ்டம்களில் பங்கு பெறுவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் கேஷ் பேக் கார்டை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில் அதிகபட்ச பலனை பெறுவதற்கு உங்களுக்கு ஆசையாக இருந்தால் நீங்கள் ரிவார்டு கார்டை வாங்கலாம்.
*பொதுவாக கேஷ்பேக் கார்டுகளுக்கான ஆண்டு வாரியான கட்டணம் குறைவாகவோ அல்லது எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கூட இருக்கும். எனினும் ரிவார்டு கார்டுகளுக்கான கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படும்.
*கேஷ்பேக் கார்டுகள் நேரடியாக உங்களுடைய சேமிப்புகளில் கவனம் செலுத்துகிறது. எனினும் ரிவார்டு கார்டுகளில் பயண சலுகைகள், இன்சூரன்ஸ் மற்றும் பிரத்தியேகமான நிகழ்வுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
.