கொழும்பு – கோட்டை க்ரிஷ் டிரான்ஸ்வார்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (22) கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர முன்னிலையில் அறிவித்தது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அழைக்குமாறும், அதற்கு முன்னதாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றால், குறித்த அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திறந்த நீதிமன்றில் ஆஜரானார்.
தற்போதைய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
சுமார் 70 மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர், அமைச்சர் வசந்த சமரசிங்க பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.