5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், பெர்த் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள், 50 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களே எடுத்தனர்.
இதையும் படிக்க:
மிட்செல் ஸ்டார்க் முதல் யுவராஜ் சிங் வரை… ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள்…
இதையடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா 5 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் எடுத்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இளம் வீரரான ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தற்போது உணவு இடைவேளை வரை இந்திய அணி 275 ரன்களை எடுத்து 321 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 141 ரன்களுடனும், படிக்கல் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், இந்திய அணி 9 விக்கெட்டுகளை கையில் வைத்து வலுவான இடத்தில் உள்ளது.
.