நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் புதன்கிழமை (4-12-24) அன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்டனர். நாகா-வின் தந்தையும் சூப்பர் ஸ்டாருமான நாகர்ஜுனா மணமக்களின் புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார். அதன்பிறகு, சோபிதா மற்றும் நாகசைதன்யா இருவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகள் சோபிதாவின் சகோதரி சமந்தா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதுவரை இணையத்தில் கசியாத திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில், நடிகையும் மணமகளுமான சோபிதா மணக்கோலத்தில் அமர்ந்திருக்க, அவருக்கு இரண்டு பக்கமும் அவரது தாய் தந்தை அமர்ந்தபடி திருமண சடங்கை செய்து கொண்டிருக்கின்றனர். போட்டோவில் சோபிதாவின் தந்தை முகம் பார்ப்பதற்கு கோபமாக இருப்பதுபோல் இருந்தது. அந்த போட்டோவை சோபிதாவின் சகோதரி சமந்தா “என் அப்பா கோபமடைந்தார்” என்ற கேப்ஷனுடம் சிரிக்கும் ஈமோஜி போட்டு ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் அக்கினேனி குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் 22 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த ஸ்டுடியோவை 1976ம் ஆண்டு நாக சைதன்யாவின் தாத்தாவும், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் நிறுவினார். பல டோலிவுட் படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.
திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர் பட்டியலில் சிரஞ்சீவி, நயன்தாரா, ஒட்டுமொத்த அக்கினேனி மற்றும் டக்குபதி குடும்பங்கள், என்டிஆர், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா, மற்றும் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் போன்ற திரையுலகின் முக்கிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவ்விழாவில் ஷட்டில் வீராங்கனை பிவி சிந்துவும் கலந்து கொண்டார்.
இதற்கு முன், தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபுவை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவுக்கு இது 2வது திருமணம். 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 2022ம் ஆண்டு இருவரும் திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். 2022ம் ஆண்டு முதல் நாகசைதன்யா மற்றும் சோபிதா இருவரும் டேட்டிங் செய்யத்தொடங்கியதாக பல தகவல்கள் வெளியானது. இருவரும் ஒன்றாக ஊர்சுற்றிய புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
.