Last Updated:

கடந்த ஓராண்டில் ரூபாய் மதிப்பு 4.71 சதவீதம் சரிந்து, 82.8 ரூபாயிலிருந்து 86.7 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 210 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூபாயின் மதிப்பு

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாகக் குறைந்த நிலையில், ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் சரிவு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியால் கூட இந்தச் சரிவைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருகிறது. அதிக இறக்குமதி காரணமாக அரசாங்கம் புள்ளிவிவரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய், நிலக்கரி, சமையல் எண்ணெய், தங்கம், வைரம், மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் நாட்டின் இறக்குமதி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார ஆய்வு நிறுவனமான ஜிடிஆர்ஐ, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு நாணயத்தின் சரிவு இந்தியாவின் தங்க இறக்குமதி செலவை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டுக்கு 31.25 சதவீதம் உயர்ந்து ஜனவரி 2025 இல் ஒரு கிலோவுக்கு 86,464 டாலராக அதிகரித்துள்ளது. அதுவே சென்ற ஆண்டு, ஜனவரி 2024 இல் இதன் விலை 65,877 டாலராக இருந்தது.

கடந்த ஓராண்டில் ரூபாய் மதிப்பு 4.71 சதவீதம் சரிந்து, 82.8 ரூபாயிலிருந்து 86.7 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 210 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 8ஆவது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?

சீனாவின் யுவான் மதிப்பும் இந்திய ரூபாய்க்கு எதிராக 3.24 சதவீதம் சரிந்துள்ளது. பலவீனமான ரூபாய் இறக்குமதி செலவை அதிகரிக்கும் என்றும், எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையை அதிகரிக்கும் என்றும், இது பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஜிடிஆர்ஐ நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். மேலும் பலவீனமான ரூபாய் ஏற்றுமதிக்கு உதவாது என்று கடந்த 10 ஆண்டுகால ஏற்றுமதி தரவுகள் காட்டுகின்றன.

பொதுவாக பலவீனமான நாணயம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியாவின் தரவுகள் இதற்கு மாறான கதையைக் கூறுகின்றன. இறக்குமதித் துறைகள் அதிகமாகச் செழித்து வருகின்றன. அதே சமயம், குறைந்த இறக்குமதி கொண்ட தொழிலாளர் சார்ந்த ஜவுளி போன்ற தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. 2014 முதல் 2024 வரையிலான வர்த்தகத் தரவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. மொத்த சரக்கு ஏற்றுமதி 39 சதவீதம் வளர்ந்திருந்தாலும், மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள் போன்ற அதிக இறக்குமதித் துறைகள் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன.

பலவீனமான ரூபாய் எப்போதும் ஏற்றுமதியை ஊக்குவிக்காது என்றும், இது தொழிலாளர் சார்ந்த ஏற்றுமதியைப் பாதிக்கும் என்றும், குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட இறக்குமதி சார்ந்த ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் ஸ்ரீவஸ்தவா கூறினார். 600 பில்லியன் டாலருக்கும் அதிகமான இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடனாகவோ அல்லது முதலீடாகவோ உள்ளது. இதை மீண்டும் வட்டியுடன் செலுத்த வேண்டியது வரும். எனவே, ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியின் பங்கு குறைவாகவே இருக்கும்.



Source link