Last Updated:

Gautham Gambir | இந்திய அணியின் தோல்விக்கு சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஃபார்மில் இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. மேலும் ரிஷப் பந்த் மெல்போர்ன் டெஸ்டில் அவுட்டான விதமும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்குப் பின் டிரெஸிங் ரூமில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மோசமாக விளையாடிய வீரர்களை கடுமையாகச் சாடி உள்ளார். 6 மாதங்களாக உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளேன், இனிமேல் அதுபோன்று இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியைச் சொந்த மண்ணில் 3-0 என நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்தது ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணிக்கும் இந்தத் தோல்வி மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. நியூசிலாந்து தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மீண்டும் பார்முக்கு வந்துள்ளது, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பலம் வாய்ந்த அணி என நிரூபித்துள்ளது எனப் புகழாரம் கொட்டியது. ஆனால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சறுக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் தோல்வியால் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை வெல்லும். இந்திய அணியின் தோல்விக்கு சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஃபார்மில் இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. மேலும் ரிஷப் பந்த் மெல்போர்ன் டெஸ்டில் அவுட்டான விதமும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சூழலுக்கு ஏற்ப விளையாடாமல் பந்த் அவுட்டானது குறித்து ரோஹித் சர்மாவும் கவலை தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின் தொடர் தோல்விகளால் டிரெஸிங் ரூமில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், “சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவில்லை” என்றும், “இயல்பான ஆட்டத்தை” முன்னிலைப்படுத்தி, திட்டத்தைப் பின்பற்ற மறுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் கடந்த ஆறு மாதங்களாக வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்த பிறகு, இனிமேல் விளையாட்டு முறை குறித்துத் தானே முடிவெடுப்பார் என்றும், அவரது வழிமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் வீரர்களை அணியிலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய அணி தோல்விகளால் கவுதம் கம்பீர் மீதும் கேள்விகள் எழ ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தொடர் தோல்விகள் குறித்தும், அஸ்வின் ஓய்வு குறித்தும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் பிசிசிஐ விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.



Source link