Last Updated:
உலகக்கோப்பை 20 ஓவர் தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க மைதானங்கள் படுமோசமாக இருந்ததால் ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த மோசமான அனுபவத்தை ஐசிசி மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் மைதானங்களை சரியான முறையில் தயார் செய்யவில்லை என வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இதனால் ஐசிசி அதிகாரிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று போட்டியில் விளையாடாது என்றும், இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் விளையாடும் என்றும் ஐசிசி -யிடம் பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா விளையாடும் போட்டி அல்லாத மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகின்றன. இதற்காக மைதானங்களை பராமரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மைதானங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் விளையாடுவதற்கு தகுதி வாய்ந்ததாக இன்னும் ஆக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முடிந்து இருக்க வேண்டும். ஆனால் இன்னமும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மைதானங்களை பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இப்போதைய சூழலில் பணிகள் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் நிறைவேற்றி விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக்கோப்பை 20 ஓவர் தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க மைதானங்கள் படுமோசமாக இருந்ததால் ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த மோசமான அனுபவத்தை ஐசிசி மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இருப்பினும் பாகிஸ்தானில் மைதான பராமரிப்பு முழுமை அடையாத நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது ஐசிசி அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
January 09, 2025 9:45 PM IST