ஐசிசி சாம்பியன் கோப்பை தொடர் நடத்துவதை பாகிஸ்தான் புறக்கணித்தால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
8 நாடுகள் பங்கேற்கவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட முடியாது என இந்தியா தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வேறு ஏதேனும் நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி வைத்தால் அதில் விளையாட இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்து வரும் பாகிஸ்தான் அனைத்து போட்டிகளையுமே தங்கள் நாட்டில் நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
அத்துடன், பாகிஸ்தானில் வந்து இந்தியா விளையாட மறுத்தால் தொடரை நடத்துவதிலிருந்தே விலக பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் விலகினால், இத்தொடருக்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி வழங்கும் சுமார் 500 கோடி ரூபாயை இழக்க நேரிடும். ஐசிசி வழங்கும் மேலும் சில நிதியுதவிகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது.
8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இந்த போட்டியை நடத்தலாம் என ஐசிசி ஆலோசனை செய்து வருகிறது.
பாகிஸ்தான் அரசின் தொடர் அத்துமீறல் காரணமாக அந்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்து வருகிறது. இரு அணிகளும் மூன்றாவது நாட்டில் நடைபெறும் போட்டியில் மட்டுமே கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பங்கேற்று வருகின்றன. கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
.