ஐசிசி முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் மறைமுகமாக மேட்ச் பிக்சிங் செய்ததாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
லலித் மோடி அளித்த நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், சிஎஸ்கே அணி உரிமையாளரும், பிசிசிஐ முன்னாள் செயலாளருமான சீனிவாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், இங்கிலாந்து வீரரான ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் சிஎஸ்கே அணிக்கு வேண்டும் என சீனிவாசன் வற்புறுத்தியதாகக் லலித் மோடி கூறியுள்ளார். ஃபிளின்டாஃப்பை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லா அணிகளிடமும் அவரை ஏலம் எடுக்கக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில், கடைசி நேரத்தில் சென்னை நடுவர்களை மாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க:
சர்ச்சை வீரர்கள் சாதிப்பார்களா?… ஐபிஎல் ஏலமும், பிசிசிஐ தடையும்!
“இது அனைத்து அணிகளுக்கும் தெரியும்” என்றும், ஆனால் அப்போது சீனிவாசன் பிசிசிஐ செயலாளராக இருந்ததால், “இந்த மோசடிகளை செய்ததால் யாரும் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை” எனவும் கூறியுள்ளார். “அவரது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாமல் இருந்திருந்தால் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதித்திருக்க மாட்டார்” என்றும் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே, சிஎஸ்கே அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறி 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணி மீதான லலித் மோடியின் குற்றச்சாட்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
.