சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர்.

ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி தலைநகர் டாம்ஸகஸையும் கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அன்றைய தினமே ஜனாதிபதி ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தனக்கு முற்காலங்களில் உதவி வந்த ரஷியாவில் ஆசாத் குடும்பதோடு தஞ்சம் அடைந்துள்ளார்.

ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கிளர்ச்சிக் குழுவினர் புதிய தலைமையை உருவாக்கி வருகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தை இழந்து, பிறந்த நாட்டையும் இழந்து நாடு கடத்தப்பட்டு ரஷிய தலைநகர் மாஸ்க்கோவில் ஆசாத்[59 வயது] தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரிடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-அசாத்[49 வயது] விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவில் தனது கணவன் ஆசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விருப்புவதாக துருக்கி, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஸ்மா, ரஷிய நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது, தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.

சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்து முதலீட்டு வங்கியில் வேலை செய்துவந்த அஸ்மா, டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். அந்த வருடமே ஆசாத் சிரியாவின் ஜனாதிபதி ஆனார்.

அசாத்கள்- ஒரு அலாவைட் குடும்பம் – வரலாற்று ரீதியாக சுன்னி மக்கள் அதிகம் உள்ள சிரியாவில் ஆதிக்கம் செலுத்தியது. ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.

இப்போது மாஸ்கோவில் புகலிடத்தின் கீழ் வசிக்கும் பஷர் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.

அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், $2 பில்லியன் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.



Source link