மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்து, நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் மூலம் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.

விளம்பரம்

இதனிடையே டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் பஷார் அல் ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தெறிந்தனர். மேலும் ஹோமஸ் உள்ளிட்ட நகரங்களில் சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர்.

.

  • First Published :



Source link