ஒருவழியாக ஒன் ப்ளஸ் (OnePlus) அதன் பிரத்யேக ஆண்ட்ராய்டு ஸ்கின்னின் சமீபத்திய பதிப்பான OxygenOS 15-ஐ அறிவித்துள்ளது. வேகமான செயல்திறன், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் குறைந்தபட்ச வடிவமைப்பு ஆகியவை இதன் சிறப்புகளாக இருக்கும் என ஒன் ப்ளஸ் உறுதியளிக்கிறது.
OxygenOS 15-ல் உள்ள சிறப்பம்சங்கள்
OxygenOS 15 சில முக்கிய மேம்பாடுகளுடன் வரவுள்ளது. இது OnePlus ஃபோன்களை மென்மையாகவும், திறம் மிக்கதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus ஆனது சமீபத்திய OxygenOS புதுப்பித்தலுடன் அதன் அனிமேஷன்களை மேம்படுத்தியுள்ளது.
அனிமேஷன்
முதல் சிறப்பம்சம் பேரலல் ப்ராசஸிங் ஆகும். அதாவது இந்த வசதியின் மூலம் iOS-ல் இருப்பதை விட வேகமாக 20க்கும் மேற்பட்ட செயலி வரை தொடர்ச்சியாக திறக்கவும் மூடவும் முடியும்.
நினைவகம்
OxygenOS 15 ஆனது OnePlus ஃபோன் பயனர்களுக்கு அதிக சேமிப்பிடத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. OxygenOS 14 உடன் ஒப்பிடும்போது இந்த இயக்க முறைமை 20 சதவிகிதம் குறைவான சேமிப்பிடத்தையே பயன்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள்
ஒரு புதிய AI Detail Boost அம்சம் உள்ளது. இது குறைந்த தெளிவுத்திறன் அல்லது க்ராப் செய்யப்பட்ட படங்களை 4K காட்சிகளாக மாற்றும். மேலும் இதன் மூலம் தானாகவே பிக்சலேட்டட் படங்களை அடையாளம் காண முடியும் மற்றும் பயனர்களுக்கு ஒரே கிளிக்கில் தெளிவான புகைப்படத்தை வழங்குகிறது.
அதேபோல் OxygenOS 15-ல் AI Unblur அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது கூடுதல் பயன்பாடுகள் எதுவுமின்றி மங்கலான படங்களை திறம்பட சரிசெய்கிறது.
ஆன்ட்ராய்டு 14 சாதனங்களில் நாம் முன்பு பார்த்த சர்க்கிள் டு சர்ச் அம்சமும் OxygenOS 15-ல் உள்ளது. புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள பொருட்களை விரைவாக அடையாளம் காண இது உதவுகிறது. நேவிகேஷன் பார் அல்லது முகப்பு பட்டனில் ஒரு எளிய நீண்ட அழுத்தத்தின் மூலம், ஒரு வட்டத்தை வரைவதன் மூலம் அல்லது ஹைலைட் செய்வதன் மூலம் திரையில் படங்களை விரைவாக தேட இந்த அம்சம் உதவும்.
நிகழ்நேர பதில்களுக்கான ஜெமினி ஒருங்கிணைப்பு
வரவிருக்கும் OnePlus போன்களில், கூகுள் ஜெமினி செயலி AI உதவியாளராக தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். எனவே, ஜெமினி லைவ் மூலம் ஒருவர் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை சிறப்பாகவும், வேகமாகவும் தெரிந்துகொள்ள முடியும். இதில் சிக்கலான தலைப்புகளை எளிதாக்கலாம் மற்றும் நிகழ்நேர பதில்களுடன் முக்கியமான தருணங்களுக்கு ஒத்திகை செய்யலாம். ஜெமினி லைவ் விரைவில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும். உங்கள் குரலைப் பயன்படுத்தி ஜெமினியுடன் பேசலாம்.
OnePlus மற்றும் iPhone சாதனங்களுக்கு இடையே கோப்பு பகிர்வை எளிதாக்க புதிய “ஐபோனுடன் பகிர்” என்ற அம்சமும் உள்ளது. இது வெவ்வேறு தளங்களில் ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோ கோப்புகளை மாற்ற பயனர்களை அனுமதிக்கிறது.
இதையும் படிக்க: ட்ரூ வயர்லெஸ் அம்சங்களுடன் புதிய இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?
பாதுகாப்பு
புதிய திருட்டு பாதுகாப்பு அம்சத்தையும் இதில் நீங்கள் காண்பீர்கள். திருட்டுக்கு முன்பும், திருடும்போதும், பின்பும் உங்கள் சாதனம் மற்றும் தரவைப் பாதுகாக்க இது உதவும். ஒருவர் திடீரென்று உங்கள் போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட முயற்சித்தால், போன் தானாகவே லாக் ஆகிவிடும்.
கூடுதல் பாதுகாப்புகளாக ரிமோட் லாக் அம்சம் உள்ளது. இது பயனர்கள் கூகுள் கணக்கில் உள்நுழையாமல் தங்கள் ஃபோன் எண்ணை மட்டும் பயன்படுத்தி மொபைலை லாக் செய்ய அனுமதிக்கிறது. மேலும், திருட்டு பாதுகாப்பு செயல்பாடுகளை முடக்குவது அல்லது FindMyDevice போன்ற முக்கியமான செயல்களுக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்பு தேவைப்படுகிறது.
OxygenOS 15 வெளியீட்டு தேதி:
வழக்கம்போல், OnePlus முதலில் பீட்டா பதிப்புகளை வெளியிடும். அதன் பின்னர் படிப்படியாக நிலையான பதிப்புகளை பொதுமக்களுக்கு வெளியிடும். OxygenOS 15-ன் முதல் பீட்டா பதிப்பு அக்டோபர் 30 அன்று வெளியிடப்படும் என்று OnePlus உறுதிபடுத்தியுள்ளது.
இதையும் படிக்க:
உங்க டேப்லெட்டின் பேட்டரி டக்குனு காலி ஆகிடுதா..? அப்ப இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
தற்போதைக்கு, OnePlus 12 போனில் மட்டும் OxygenOS 15 கிடைக்கப்பெறும் என தெரியவந்துள்ளது. ஆனால், OnePlus Nord 4, OnePlus 12R, OnePlus Nord CE 4 மற்றும் OnePlus Nord CE 4 லைட் போன்ற போன்களிலும் OxygenOS 15 வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.