சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (27) மாலை 4 மணி வரை நிலவரப்படி, 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
மேலும், 147 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 75 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், நுவரெலியா, கந்தபளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 37 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சமர்ஹில் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பண்டிதாயகும்புர பாடசாலையில் உள்ள பாதுகாப்பான நிலையத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹங்குராங்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டடத்தில் 02 பாதுகாப்பான நிலையங்களும் திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் சுழற்சி நிருபர்
The post சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 898 பேர் நிர்கதி appeared first on Thinakaran.