தாழமுக்கத்தின் பாதிப்பு இன்று முதல் படிப்படியாக குறையும் வாய்ப்பு
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையினால் 23 மாவட்டங்களில் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 534 குடும்பங்களைச் சேர்ந்த, 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இயற்கை அனர்த்தங்களினால் நேற்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காணாமல்போயுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 8,678 குடும்பங்களை சேர்ந்த 27 ஆயிரத்து 717 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 279 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 23 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் நேற்று பிற்பகல் வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 43 ஆயிரத்து 682 பேரும் மன்னார் மாவட்டத்தில் 18,642 குடும்பங்களைச் சேர்ந்த 61,297 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8,006 பேரும் முல்லைத்தீவில் 7,108 பேரும் வவுனியாவில் 3,542 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்தெரிவித்தது.
அத்துடன் மத்திய மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் 732 குடும்பங்களைச் சேர்ந்த 2,839 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 201 குடும்பங்களைச் சேர்ந்த 774 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் 82 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களினூடாக நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று பிற்பகல் நிலை கொண்டிருந்ததாகவும் கிழக்கு கடற் பரப்பிலிருந்து வடக்கு, வடமேல் திசைக்கு மெதுவாக அது நகரும் நிலையில் மேலும் அது வலுவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் அதன் மூலம் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கலாம் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று (29) வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வடக்கின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமெனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, காற்று, இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை அணத்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் வளிமண்மண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
The post சீரற்ற காலநிலையால் 12 பேர் உயிரிழப்பு appeared first on Thinakaran.