– இராணுவ வாகனங்கள் மூலம் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு
நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தேவையான சேவைகளை இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களை அடைய முடியாத மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் தமது பரீட்சைகளை எழுத முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அவ்வாறான மாணவர்கள் 117 எனும் இலக்கம் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய மாலிம்பட, அதுருலிய பிரதேச செயலகம், அகுரஸ்ஸ பிரதேச செயலகம், கம்புருப்பிட்டிய பிரதேச செயலகம், கம்புருப்பிட்டிய கொடவ விகாரை ஆகிய பகுதிகளில் இராணுவப் படையினர், ட்ரக் வாகனங்கள் மற்றும் யுனி பபல் வாகனங்களுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை, யட்டியான, வாரியபொல ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடிய அவசர நிலை குறித்து இராணுவ படையினர் மற்றும் ட்ரக் வாகனங்கள் மற்றும் யுனி பபல் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மோசமான காலநிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவும் நிலையில் தேவையான நிவாரண சேவைகளை அமுல்படுத்த தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி முதலாம் படை தளபதி மற்றும் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
The post சீரற்ற வானிலை; பாதிக்கப்பட்ட A/L பரீட்சை மாணவர்களுக்கு உதவும் இராணுவம் appeared first on Thinakaran.