வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன்கில் ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 9.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ரிஷப் பந்த் ஓரளவு ரன்கள் சேர்த்தார். 52 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடக்க வீரராக சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களும், கே.எல். ராகுல் 16 ரன்களும் எடுத்தனர். 42.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்தனர்.
நிலைமையை உணர்ந்து இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் ஒருநாள் போட்டிகளைப் போல் விளையாடி ரன்களை குவித்தார்.
ஜடேஜாவும் ரன்கள் சேர்க்க ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 112 பந்துகளை எதிர்கொண்ட அஷ்வின் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
சுமார் 200 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆகக் கூடும் என விமர்சிக்கப்பட்ட நிலையில், ஜடேஜாவும், அஷ்வினும் பொறுப்பாக விளையாடி இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்குக் கொண்டுவந்தனர்.
Also Read |
IND vs BAN | எம்.எஸ்.தோனி சாதனையை சமன் செய்த அஸ்வின் – எந்த ரெக்கார்ட் தெரியுமா?
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா வந்த கொஞ்ச நேரத்திலேயே அவுட் ஆனார். அவர் இன்று ஒரு ரன்கூட எடுக்கவில்லை.
இதன்பின் வந்த ஆகாஷ் தீப் சில பவுண்டரிகளை அடித்தாலும் 17 ரன்களில் விக்கெட்டானார். அஸ்வின் 113 ரன்களோடு நடையைக் கட்ட, கடைசி விக்கெட்டாக பும்ரா 7 ரன்களுக்கு வீழ்ந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்று வீழ்ந்த நான்கு விக்கெட்களில் ஹசன் மஹ்மூத் ஒரு விக்கெட்டும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஹசன் மஹ்மூத் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. பும்ரா ஓவரில் ஷத்மான் இஸ்லாம் போல்டாகினார்.
.