Last Updated:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு குறிக்கும் வகையில் அங்கு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆகாஷ் அம்பானி AI தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்
குஜராத்தின் ஜாம் நகரில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு உலகத் தரத்தில் ஏற்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிறுவனர் ஆகாஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆகாஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் AI துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் அடுத்த சில ஆண்டுகளில் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு குறிக்கும் வகையில் அங்கு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆகாஷ் அம்பானி AI தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது-
ஜாம் நகரில் அமையவிருக்கும் AI உட்கட்டமைப்பு உலக அளவில் முதல் தரவரிசையில் இடம்பிடிக்கும். இதற்கான கட்டுமானத்தை ஜாம் நகரில் ஏற்கனவே தொடங்கி விட்டோம். 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுமை அடையும்.
ஜாம் நகர் எப்போதும் ரிலையன்ஸ் குடும்பத்தின் நகையை போன்று இருக்கும். AI தொழில் நுட்பத்தை நானும், இஷா, ஆனந்த் இணைந்து மேம்படுத்துவோம். தகவல் தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தில் ஜாம் நகரை உலக அளவில் முன்னணியாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். என்று தெரிவித்தார்.
ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் தனது 25வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. டிசம்பர் 28, 1999 இல் நிறுவப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மையமாக வளர்ந்துள்ளது. இன்று இந்த நிறுவனம் இந்தியாவின் தொழில்துறை பெருமையை வெளிப்படுத்தும் ஒரு பொறியியல் அற்புதம் ஆகும்.
ஆரம்பத்தில், சாலைகள், மின்சாரம் அல்லது குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகள் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறண்ட பகுதியில் ஒரு பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பலருக்கு சந்தேகம் இருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி விமர்சகர்களை மீறி ஜாம்நகரை உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றினார்.
இதையும் படிங்க – அட செம பிளானா இருக்கே.. ஜியோவின் 2025 புத்தாண்டு ரிசார்ஜ் பிளான் அறிமுகம்!
திருபாயின் தலைமையில், கடுமையான சூறாவளிகள் மற்றும் தளவாடச் சவால்கள் போன்ற தடைகளைத் தாண்டி, வெறும் 33 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. அவரது பார்வை பாலைவனம் போன்ற நிலப்பரப்பை ஒரு துடிப்பான தொழில்துறை சோலையாக மாற்றியது.
January 02, 2025 7:47 PM IST