தெலுங்கு நடிகர் மோகன் பாபு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் “சூரரைப் போற்று” படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்திருப்பார். தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற குடும்பமாக விளங்குகிறது மோகன்பாபுவின் ‘மஞ்சு’ குடும்பம். தற்போது இந்தக் குடும்பம் சிக்கலை சந்தித்து வருகிறது. நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். தந்தையைப் போலவே இவர்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் குடும்பத்துக்குள் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சொத்து பிரச்சினை நிலவிவந்த நிலையில், தற்போது அது கைகலப்பாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது.
சில நாட்கள் முன் சொத்து பிரச்சினை காரணமாக தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பனஹாகிரி ஷெரிப் காவல் நிலையத்தில் நடிகர் மோகன்பாபு புகார் அளித்தார். தொடர்ந்து நடிகர் மனோஜ் 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் தனது தந்தையான மோகன்பாபு தாக்கியதாகவும், இதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறி, ரத்தக்காயத்துடன் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காயங்களுடன் சிகிச்சை பெற்றார் நடிகர் மனோஜ். சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் பெல்ட்டுடன் பொதுவெளியில் தோன்ற, இந்தப் புகைப்படங்கள் வைரலானது.
Also Read | “தமிழக அரசின் ஒப்புதலின்றி…” – டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?!
இப்படி நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என வலம் வரும் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மஞ்சு மனோஜூக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டதால், இருவரும் மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் மஞ்சு மனோஜ் தனது ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு தனது தந்தையான மோகன்பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராட்சத இரும்புக் கேட்டுக்கு வெளியே நின்றபடி கதவைத் திறக்குமாறு மனோஜ் பெரும் ஆரவாரம் செய்துள்ளார்.
வீடு அமைந்திருந்த வளாகத்திற்கு இருந்த மோகன் பாபுவின் ஆதரவாளர்கள் கதவைத் திறக்க விடாமல் தடுத்துக் கொண்டு நின்றனர். ஆனால் அவர்களது எதிர்ப்பையும் மீறி மஞ்சு மனோஜ் ஆதரவாளர்கள் கேட்டை முட்டித் தள்ளி திறந்து கொண்டு உள்ளே படையெடுத்துள்ளனர். அவர்களுடன் செய்தியாளர்களும் கேமராவுடன் செய்தி சேகரிக்கும் நோக்கில் சென்றுள்ளனர்.
இதனிடையே மோகன்பாபுவின் ஆதரவாளர்கள் அவர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க முயன்றதோடு தாக்குதலும் நடத்தியுள்ளனர். மோகன் பாபுவும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளார். இவர்களுக்கு நடவே சிக்கிக் கொண்ட செய்தியாளர்களை மைக்கை பிடுங்கி அடித்து விரட்டியுள்ளார் மோகன் பாபு.
இதனால் திகைத்துப் போன செய்தியாளர்கள் மோகன் பாவுவின் வீட்டிலிருந்து வெளியேறினர். சம்பவம் அறிந்து ரச்சகொண்டா போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். இருதரப்பையும் சமாதானப்படுத்தியும் பிரச்சினை ஓயாததால் அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சண்டைக்கு நடுவே நடிகர் மஞ்சுமனோஜ் சட்டை கிழிந்த நிலையில் ஆவேசமாக சென்று கொண்டிருந்தார். செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
.