செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி, வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் பூமியைப் போன்று 8 கிரகங்கள் இருந்தாலும், பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்ந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்ந்தார்களா, வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு தரப்பிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூமியைச் சுற்றிவரும் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலன்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதேபோல, சூரியக் குடும்பத்தில் பூமியை அடுத்த 4-ஆவதாக உள்ள செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூமியிலிருந்து 5 கோடியே 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகம் அமைந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த NWA7034 என்ற விண்கல், 2011-ஆம் ஆண்டில் சகாரா பாலைவனத்தில் விழுந்தது.
கறுப்பு அழகு என்று அழைக்கப்படும் இந்த விண்கல்லை எடுத்து ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் புவி மற்றும் கிரக அறிவியல் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விண்கல்லிலிருந்து இரும்பு, அலுமினியம், சோடியம், ஜிர்கான் ஆகிய தாதுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஜிர்கான் தாதுப்பொருளை ஆய்வுசெய்தபோது, இது 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று தெரியவந்துள்ளது.
எரிமலை வெடிப்புடன் தொடர்புடைய இந்த தாதுப் பொருளில் வெப்பமான நீர் நிறைந்த திரவம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் ஆரோன் கவோசி, நுண்ணிய அளவிலான புவிவேதியியல் முறையில் தாதுப் பொருளை ஆய்வுசெய்ததாக குறிப்பிட்டார்.
இது பழங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வெப்பமான நீர் கட்டமைப்பு இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படையாக வெப்பநீர் கட்டமைப்பு அவசியமாக இருந்ததாகவும் ஆரோன் கவோசி குறிப்பிட்டார். இதேபோல, செவ்வாய் கிரகம் உருவானபோதும் மனிதர்கள் வாழ்வதற்கான நீர் இருந்ததை தங்களது ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரக ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் :
சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன் எம்பி; உடனடியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம்!
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. 298 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பல்வேறு புகைப்படங்களை அனுப்பியது. எனினும், 2022-ஆம் ஆண்டில் தகவல் தொடர்பை இழந்தது.
இந்நிலையில், மங்கள்யான்-2 விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதேபோல, பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இதன்முடிவுகள், பல்வேறு புதிய தகவல்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.