– இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியச் சந்தையைப் பயன்படுத்துவது பற்றி கவனம்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (Dr. S. Jaishankar) மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Ajit Doval) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி தங்கியுள்ள ITC Maurya ஹோட்டலில் நேற்று மாலை (15) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதிக்கும், இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கைக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சிநேகபூர்வமாக இடம்பெற்றதுடன், இந்தியாவின் பாரிய சந்தையைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் சுற்றுலா, முதலீடு, வலுசக்தி துறைகளுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது இரு தரப்பு கடற்றொழில் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து, பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்புகளில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெனாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK
The post ஜனாதிபதி இந்திய இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் appeared first on Thinakaran.