- வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம்
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் (Ajay Banga) இடையில் நேற்று (27) ஒன்லைன் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இடம்பெற்றது.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எதிர்கால் அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதற்கும் உலக வங்கி இலங்கைக்கு வழங்கக்கூடிய ஆதரவைப் பற்றி அஜய் பங்கா கருத்துத் தெரிவித்ததோடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடினார்.
உலக வங்கி தற்போது இலங்கைக்கு பொருளாதார கொள்கை, நிதி, போட்டித்தன்மை, முதலீடு, நிறுவன மேம்பாடு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஆகியவற்றிற்கு ஆதரவை வழங்குகிறது. எதிர்காலத்தில் விவசாய துறையை மேம்படுத்துதல், நீர் முகாமைத்துவம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, சமூக மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற உதவிகளும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எரிசக்தித் துறையில் திட்டங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை, கடற்றொழில், அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல், குறிப்பாக இப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கல்வி மற்றும் தொழில் பயிற்சி துறைகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் உலக வங்கியின் தலைவருடன் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி திறக்கப்படவுள்ள 20 தெற்காசிய கூட்டுக் காரியாலயங்களுக்கான இணைக்கும் நாடாகவும் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் குறிப்பிட்டார். அத்துடன் உலக வங்கி குழுமத்தின் கீழ் சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான வங்கி (IBRD) சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA), சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) ஆகிய அலுவலகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெனாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post ஜனாதிபதி – உலக வங்கி குழும தலைவர் இடையே கலந்துரையாடல் appeared first on Thinakaran.