இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இதில் மெல்போர்ன் டெஸ்ட் பாக்சிங் டே போட்டியாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடக்கிறது.
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரராக முதல் 3 போட்டிகளில் விளையாடிய நாதன் மேக்ஸ்வினி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் விளாசியிருந்த 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் , ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றொரு ஆல்ரவுண்டர் யூ வெப்ஸ்டரும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
காயம் காரணமாக ஹேசில்வுட் இடம் பெறவில்லை. முதல் 3 போட்டிகளில் 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் என இரண்டு துணை கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
19 வயதான சாம் கான்ஸ்டாஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை பேட்டரான இவர், 11 முதல் தரப் போட்டிகளில் விளையாடி அதில் 2 சதம், 3 அரைசதங்களுடன் 718 ரன்கள் குவித்துள்ளார். இம்மாதம் 6ம் தேதி நடந்த ஆட்டத்தில் கூட சாம் கான்ஸ்டாஸ் 145 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்தார்.
U-19 ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தார். டிசம்பர் 1 அன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி சாம் கான்ஸ்டாஸ் 97 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக் போட்டிகளில் இரண்டு நாட்களுக்கு முன் அறிமுகமான சாம் அறிமுகப்போட்டியிலேயே 27 பந்தில் 56 ரன்கள் குவித்தார். அவரின் அதிரடி, அதேநேரம் நேர்த்தியான ஆட்டம், தற்போது சிறிய வயதிலேயே தேசிய அணியில் இடம்பிடிக்க வைத்துள்ளது. பாக்சிங் டே டெஸ்டில் உஸ்மான் கவாஜா உடன் சாம் ஓப்பனிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 20, 2024 2:29 PM IST