Last Updated:
Digital Arrest Scams: ஆன்லைன் மோசடிகள் மிகவும் சௌகரியமான முறையில் நடந்து வருகிறது.
பொருளாதாரத்தை டிஜிட்டல் ரீதியாக மாற்றுவதற்கான இந்தியாவின் பயணம் மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் நாம் அனைவரும் மிகவும் விரைவாக, பாதுகாப்பாக அதே நேரத்தில் சௌகரியமான முறையில் பேமெண்ட்களை செய்து வருகிறோம். கையில் பணத்திற்கான தேவை மெதுமெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் இதுவே ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இன்று டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மோசடிக்காரர்கள் உயர் அதிகாரிகளை போல வேஷம் போட்டு குறி வைத்த நபர்களின் முக்கியமான தகவல்களைப் பெற்று அதன் மூலமாக பணம் சம்பாதிக்கின்றனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன?:
ஆன்லைன் மோசடிகள் மிகவும் சௌகரியமான முறையில் நடந்து வருகிறது என்பதற்கு முதன்மையான ஒரு எடுத்துக்காட்டு இந்த டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. இந்த மோசடிகளில் மோசடிக்காரர்கள் அரசு அதிகாரிகளை போல நடித்து குறி வைத்த நபர்கள் மீது போலியான சட்ட ரீதியான வழக்குகளை சுமத்தி, பணத்தை அனுப்புமாறு கேட்டோ அல்லது தனி நபர் விவரங்களை பெற்று அதன் மூலமாக பணத்தை திருடுகின்றனர். இதனை அவர்கள் போன் கால் மூலமாக முதலில் செய்து பின்னர் வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் போன்ற பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்தி வீடியோ கால்களில் ஈடுபடுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களும் பயந்து அதன் விளைவாக பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். டிஜிட்டல் பேமெண்ட் சௌகரியமான ஒரு ஆப்ஷனாக இருந்தாலும் ஆன்லைனில் நம்மை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை பெற்று இருப்பது மிகவும் அவசியம். எனவே இந்த மாதிரியான மோசடிகளை சமாளிப்பதற்கு நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மோசடிகளை எப்படி அடையாளம் காண்பது என்றும், ஆன்லைன் பேமெண்ட்கள் செய்யும் பொழுது நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதையும் விளக்கியுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியை அடையாளம் காண்பது எப்படி? *காவல்துறை, CBI, வருமானவரித்துறை அதிகாரிகள் அல்லது கஸ்டம்ஸ் ஏஜென்ட்கள் என்ற பெயரில் உங்களுக்கு போன் கால் செய்யும் போலி அரசு ஊழியர்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உங்களை அச்சுறுத்தும் பொழுது நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
*உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறை உடைகள், அரசு லோபோக்கள் அல்லது அலுவலகத்தில் இருப்பது போன்றான பேக்ரவுண்ட் சத்தம் ஆகியவற்றை செய்து வீடியோ கால்களுக்கு வருமாறு மோசடிக்காரர்கள் உங்களை கேட்பார்கள். உங்களை உடனடியாக கைது செய்யப் போவதாகவும் அல்லது உங்கள் மீது உடனடி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பயமுறுத்துவார்கள். *மோசடிக்காரர்கள் உங்களுடைய தனி நபர் விவரங்கள் அல்லது பெரிய அளவிலான தொகையை பெற்றுக்கொண்டு இந்த மோசடியை மறைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுப்பார்கள்.
பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் சில வழிகள் *சட்டத்திற்கு உட்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாக எதிர்பாராத போன் கால்கள் அல்லது மெசேஜ்களை பெறும் பொழுது அது உண்மைதானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பொறுமையாக இருந்து உங்களுடைய பயத்தை வெளிக்காட்டாமல் விஷயத்தை கையாளுங்கள். உண்மையான அரசு அதிகாரிகள் எந்த ஒரு வழக்கையும் போனிலோ அல்லது வீடியோ காலிலும் விசாரணை செய்ய மாட்டார்கள்.
*சந்தேகத்திற்குரிய எண்களை புகார் அளிப்பதற்கு நீங்கள் நேஷனல் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.
*அவர்கள் அனுப்பிய மெசேஜ்கள், ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் அனுப்பி வைத்த டாக்குமென்ட்கள் போன்றவற்றை சேமித்து வையுங்கள். அதிகாரிகள் கேட்கும் பொழுது ரிப்போர்ட்டை தாக்கல் செய்ய இது உதவியாக இருக்கும்.
டிஜிட்டல் அரஸ்ட் செய்திகள்:
39 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு ஆளாகி, மோசடிக்காரர்களிடம் 11.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். மோசடிக்காரர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகளை போல காட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் ஆதார் அட்டை பண மோசடி செய்வதற்காக பேங்க் அக்கவுண்ட் திறப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இந்த மோசடி நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் நடந்துள்ளது. எனவே இந்த மாதிரியான டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
December 26, 2024 6:23 PM IST
Digital Arrest Scams: டிஜிட்டல் அரஸ்ட் மோசடியை கண்டுபிடிப்பது எப்படி..? அதனை தடுப்பதற்கான சூப்பர் வழிகள் இதோ!