அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பது யாருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ எலான் மஸ்க்கிற்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கான காரணத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரின் திடீர் நட்பு, 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தன. முன்னதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாக இருந்த ஹிலாரி மற்றும் பைடனுக்கு ஆதரவளித்து வந்த மஸ்க், டிரம்ப்பை கடுமையாக விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடாது எனவும் வலியுறுத்தி வந்தார். ஆனால், 2021-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி உடனான உறவை மஸ்க் முறித்துக்கொண்டார்.
தற்போது எப்படி டிரம்புக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் களமாடினாரோ, அதேபோல், பைடன் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மின்சாரக் கார்களின் கண்காட்சிக்கு ஏன் அழைக்கவில்லை?, விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றபோது ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி பைடனை விமர்சித்து வந்தார்.
பின்னர், டிவிட்டரை வாங்கி அதற்கு எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்த போது முதல் நடவடிக்கையாக டிரம்பின் மீதான தடையை நீக்கினார். 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் கேப்பிடல் ஹில் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது டிவிட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கைத் தடை செய்திருந்தது.
எனினும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்பை ஆதரிக்காமலேயே இருந்தார் எலான் மஸ்க். பென்சில்வேனியாவில், தேர்தல் பரப்புரையின் போது டிரம்ப் மீது தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அவருக்குத் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் அறிவித்தார்.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் பங்கேற்ற மஸ்க், “Make America Great Again” என முழங்கினார். அன்று முதல் தனது எக்ஸ் தளத்தில் டிரம்புக்கு ஆதரவாகவும், கமலா ஹாரிஸை கிண்டல் செய்தும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
20 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட மஸ்க்கின் பதிவுகள் அமெரிக்க மக்களிடையே கண்டிப்பாக சலனத்தை ஏற்படுத்தின.
மேலும் பல நூறு கோடிகளையும் டிரம்ப் பரப்புரைக்காகச் செலவு செய்தார். இந்த அன்பைக் கண்டு பூரித்துப் போன டிரம்ப், தான் அதிபர் ஆனால் அரசின் நிதிச் செயல்திறன் தணிக்கை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்க மஸ்க் தலைமையில் பணிக் குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதன்மூலம், மிகப்பெரிய வரிக் குறைப்பு ஆதாயங்களை மஸ்க் பெறுவார் என்றும், டிரம்ப்-க்கு எலான் மஸ்க் கண்மூடித்தனமான ஆதரவளிக்க இதுவும் ஒரு காரணம் என்றும் விமர்சனங்களும் எழுந்தன.
இது மட்டுமல்லாமல் பைடன் அரசு, விண்வெளி ஆய்வு விவகாரத்தில் கடுமையான சட்டங்களை விதிப்பதாகவும், இதன் காரணமாகத் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதுமையான கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர முடிவதில்லை எனவும் மஸ்க் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
.Also Read |
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ராஜ்ஜியம்… இந்தியா சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?
மேலும் மஸ்க்கின் டெஸ்லா மோட்டார்ஸ், ஹைப்பர்லூப், ஜிப்2, சோலார் சிட்டி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) போன்ற பல நிறுவனங்கள் மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறார் மஸ்க்.
அதேசமயம், “எலான் மஸ்க் ஒரு மேதை.. சிறந்த கண்டுபிடிப்பாளர்” என டிரம்ப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இருவருக்கும் உள்ள இந்த நெருக்கத்தினால் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க் செல்வாக்குமிக்கவராக வளம் வருவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
.