எந்த சர்வதேச கிரிக்கெட் அணியும் ஏற்படுத்தாத சாதனையை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தற்போது வரை 3 ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
முதல் மேட்ச்சில் இந்திய அணியும் இரண்டாவது மேட்ச்சில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரில் யார் முன்னிலையில் பெறுவது என்பதை தீர்மானிக்கும் 3-ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 107 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்ஸர் 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். இதன் பின்னர் 220 ரன்கள் என்ற மிக கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே கட்டுகோப்பாக வந்து வீசிய இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதிக ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் தென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சன் 17 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 54 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் எந்த ஒரு அணியும் ஏற்படுத்தாத புதிய சாதனையை இந்தியா பதிவு செய்திருக்கிறது. அதாவது ஒரு காலண்டர் ஆண்டில் மட்டும் அதிக முறை 200 ரன்களை தாண்டிய அணி என்ற ரெக்கார்டை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
2024-ஆம் ஆண்டு மட்டும் இந்திய அணி 8 முறை 200 மற்றும் அதற்கு அதிகமான ரன்களை எடுத்து இருக்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பெர்க் நகரில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
.