நடிகர் தனுஷுக்கு எதிராக, நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு தனுஷுடன் நடித்த நடிகர் கார்த்திக் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளது. அதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், நயன்தாரா நடிகர் தனுஷ் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி இன்ஸ்டாகிராமில் மூன்று பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனது திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் ‘‘நானும் ரவுடிதான்’’ பட பாடல் பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்றும் அதனால் தான் ஆவணப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிப்படைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது டிரெய்லரில் வெளியான மூன்று நொடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மிகவும் தவறான செயல் என்றும் சாடியுள்ளார்.
கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறியுள்ள நயன்தாரா, மேடைகளில் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட தனுஷால் நடந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், தனுஷ் மீதான நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு, பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாராவின் பதிவுக்கு தனுஷூடன் ‘‘மரியான்’’ படத்தில் நடித்த பார்வதி லைக் செய்துள்ளார்.
இதே போன்று, நடிகைகள், நஸ்ரியா, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி, கவுரி கிஷன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அஞ்சு குரியன், ரியா சிபு, காயத்ரி சங்கர், அதிதி பாலன், மஞ்சிமா மோகன் ஆகியோரும் நயன்தாராவிற்கு ஆதரவாக லைக் செய்துள்ளனர்.
இதற்கிடையே, தனுஷ், நயன்தாரா உடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரும் நயன்தாராவை பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் பதிவை மேற்கோள்கட்டி, “நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தைரியம்” என்கிற ரீதியில் பாராட்டி உள்ளார்.
.