விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. Netflix-ல் வெளியான இந்த ஆவணப்படம் டாப் 10 டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. ஆவணப்படம் படம் வெளியாவதற்கு முன்னர் அதன் ட்ரைலர் வெளியானது, அதை தொடர்ந்து நயன்தாரா நடிகர் தனுஷ் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி இன்ஸ்டாகிராமில் மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்களை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் ‘‘நானும் ரவுடிதான்’’ பட பாடல் பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்றும் அதனால் தான் ஆவணப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகவில்லை என்றும் கூறியிருந்தார்.
தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிப்படைந்திருப்பதாகவும் கூறினார். மேலும், டிரெய்லரில் வெளியான மூன்று நொடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது மிகவும் தவறான செயல் என்று மிகவும் வன்மையாக சாடியிருந்தார் நயன். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறிய நயன்தாரா, மேடைகளில் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட தனுஷால் நடந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
தனுஷ் மீதான நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு, பிரபல நடிகைகள் பார்வதி திருவோத்து, நஸ்ரியா, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி, கவுரி கிஷன், அஞ்சு குரியன், ரியா சிபு, காயத்ரி சங்கர், அதிதி பாலன், மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் பதிவுக்கு லைக் போட்டு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால் ஆதரவு தெரிவித்த நடிகைகள் பெரும்பாலானோர் தனுஷுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் என்பதுதான். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பார்வதியிடம் நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்தது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க:
நான்கே வரிகளில் மகாபாரத கதையை எழுதி சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த கண்ணதாசன்.. எந்த பாடல் தெரியுமா?
நயன்தாராவுக்கு ஏன் ஆதரவு கொடுத்தார் என்பதற்கு விளக்கமளித்த நடிகை பார்வதி கூறுகையில், “லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாரா சினிமாவில் தனக்கான இந்த இடத்தை மிகுந்த போராட்டம் நடத்திதானே உருவாக்கினார். அப்படிப்பட்ட ஒருவர் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் நிச்சயம் அதில் உண்மை தன்மை இருக்கும் என்பதை உணர்தேன். எனக்கும் இதே போன்ற நிலைமை வந்தபோது ஆதரவு தெரிவிக்க யாருமே இல்லாமல் நின்று இருக்கிறேன், அந்த நிலை நயன்தாராவுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் ஆதரவு தெரிவித்தேன். அதே போல், நயன்தாராவுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றால் குரல் கொடுப்பேன்” என்று தனது பதிலை அழுத்தமாக தெரிவித்தார் நடிகை பார்வதி.
.