தபால் ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னரும் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் முன்னறிவிப்பின்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தபால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளே ஆரம்ப முன்னோடிகளாக திகழ்வதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார இங்கு தெரிவித்தார். இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னர் சம்பளம் தொடர்பாக வழங்கப்பட்ட முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அந்த வருடத்தின் பின்னர் சம்பளத்துடன் கொடுப்பனவுகள் இணைக்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் துறையில் 2,000 அதிகாரிகள் மற்றும் 4,000 இளநிலை பணியாளர்கள் காலியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தமது கருத்துக்களுக்கு அமைவாக செயற்படுமாயின் தொழிற்சங்கங்கள் முன்னைய போக்கை மறந்து புதிய போக்கை எடுத்தால் நாட்டில் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ யுகம் உருவாக அதிக காலம் எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டுமென தபால் தொழிற்சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஊடகங்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதைத் தடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், தொழிற்சங்கமாக ஊடக நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
The post தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் appeared first on Daily Ceylon.