தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

களுத்துறை – கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமாயின் நாடு பின்னோக்கி செல்லும் என பலர் கூறினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் போதுமானது அல்ல என கூறி வந்தால், அவர்களுக்கான மொத்த பாதுகாப்பும் நீக்கப்படும்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை மதிப்பீடு செய்தோம்.

அதன்படி, அவரது இல்லத்திற்கான மாதாந்த வாடகை 46 இலட்சம் ரூபாய் ஆகும்.

சட்டத்தின் படி, அவருக்கு வீடு ஒன்று வழங்கப்பட வேண்டும் இல்லையேல், அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்கமைய, அவருக்கான சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படுமாயின் 30,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும்.

அதேபோல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் இல்லமும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி செலுத்துவதிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளது.

ஆகையால் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது..” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



Source link