– 2 நாட்களில் வடக்கை அண்டியதாக தமிழகம் நோக்கி நகரும்
– பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம்
– சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடற்பரப்புக்கு மேலாக தாழமுக்க மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதோடு, அது மெதுவாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 2 நாட்களில் நாட்டின் வடபகுதியை அண்மித்ததாக, தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த தொகுதி தொடர்பில் விசேடமாக நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடி உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் இந்த மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
X 👉 x.com/ThinakaranLK
Telegram 👉 t.me/ThinakaranLK

 

The post தாழமுக்கம் 24 மணித்தியாலங்களில் உருவாக வாய்ப்பு! appeared first on Thinakaran.





Source link