நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில், இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அம்பாறை மாவட்டம் 

அதன்படி, சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் 4,000 குடும்பங்களைச் சேர்ந்த 14,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

தொடரும் மழை காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு, பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் நேற்று (26)பெய்த அடைமழை காரணமாக மீனவர்களின் மீன்பிடி வாடிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் கடற்கரை பிரதேசம் வெள்ளக் காடாக காட்சியளித்தது.

இதனால் அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பகுதியிலுள்ள மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்குமான நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து மேற்கொண்டுள்ளது.

இதனால் தமது வள்ளங்கள், தோணிகள், வலைகள், உட்பட இயந்திரங்களும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் கரைவலை மற்றும் ஆழ் கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின், சுமார் 50 க்கும் மேற்பட்ட வாடிகள் அடைமழை மற்றும் காற்று காரணமாக சேதமடைந்துள்ளமையினால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியிலும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதனால் இவ் வீதிகளினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அத்துடன், அவசர தேவையின் நிமித்தம் படகுகள் மூலம் பயணிக்க முடியாத அளவுக்கு இராட்சத முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள துரைவந்தியமேடு கிராமத்திற்குச் செல்லும் துறைநீலாவணை ஊடான வீதி சேனைக்குடியிருப்பு ஊடான வீதியூடாகவும் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

அத்துடன், பலத்த காற்றுடன் மழை காரணமாக, நிந்தவூரில் பிரதான வீதியோரங்களில் காணப்படும் மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நில பிரதேசங்களிலுள்ள வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் வியாபார தலங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்காமம் நன்னீர் மீனவர்களின் மீன்பிடி வள்ளங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இறந்த பாம்புகள் கரை ஒதுங்குவதனால் அப் பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, இறக்காமம் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்குச் சொந்தமான மஜீத் வாவியிலிருந்து மேலதிக நீர் வெளியேறி வருவதுடன் குறித்த வாவியின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சூறாவளி உருவாகி கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.   சூறாவளியொன்று உருவாகும் பட்சத்தில் அது தொடர்பாக மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக அறிவிக்கும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் அப் பகுதி மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு, உறவினர் வீடுகளுக்கும் பொதுக் கட்டிடங்களுக்கும் இடம்பெயர்துள்ளனர்.

அத்துடன், தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் குளங்கள் நிரம்பி வழிவதுடன் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது.

இதனால், வெல்லாவெளிக்கும் உறுகாமத்துக்கும் இடையிலான வீதியில், வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதுடன் இவ்வீதியுடனான போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்படைந்துள்ளது.

இதனிடையே, பலத்த காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக, மட்டு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/பட்/துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்திலிருந்த பாரிய விருட்சம் வேருடன் சரிந்து வீழ்ந்துள்ளது.

 

திருகோணமலை மாவட்டம் 

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று (26)வரையான காலப்பகுதியில், 623 குடும்பங்களைச் சேர்ந்த, 1,789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.

அத்துடன், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடைமழை காரணமாக சில இடங்களிலும் வயல் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளமையினால், நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீதிகளில் தேங்கி காணப்படும் வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக மூதூர் பிரதேச செயலகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்த நிலை காரணமாக அன்றாடம் கூலி வேலைகள் செய்து ஜீவனோபாயத்தை நடத்திவரும் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், இம் மாவட்டங்களிலிருந்து கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைக் கடமைகளுக்குச் செல்லும் அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்களும் பலத்த அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை துரிதப்படுத்துமாறும், மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அனர்த்த நிலைமை தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளை நேற்று (26) தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறக்காமம்

இறக்காமம்

துறைநீலாவனை

துறைநீலாவனை

அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை

மூதூர்

மூதூர்

நிந்தவூர்

நிந்தவூர்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு

திருகோணமலை

திருகோணமலை

அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை

அம்பாறை

அம்பாறை

சம்மாந்துறை

சம்மாந்துறை

 

 

 

 

The post தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Thinakaran.



Source link