துபாய் பாலைவன பூமி என்றாலும் தற்போது அடுக்கு மாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்களும், நவீன ஷாப்பிங் மால்கள் என பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. துபாய் சென்றால் அனைவரும் ஒட்டக சவாரி சென்று வர ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் துபாயில் பாலைவனத்தில் பெண் ஒருவர் உபர் ஒட்டக சவாரி செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உபரில் ஆர்டர் செய்து ஒட்டக பயணம் மேற்கொண்டதாக இளம் பெண்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளம்பெண்கள் தங்கள் வாகனம் பழுதானதால் பாலைவனத்தில் தவிப்பதாக தெரிவிக்கின்றனர். பின்னர் அதில் ஒரு பெண் தன்னிடம் இருந்த உபர் ஆப்-பில், ஓட்டக சவாரி குறித்து தேடி உடனே அந்த சேவையை புக் செய்ததாகவும் தெரிவிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், ஓட்டகத்தை அழைத்துக்கொண்டு ஒருவர் வருவதை காண முடிகிறது. மேலும் அவர் தன்னை உபர் ஒட்டக டிரைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, அந்த இளம் பெண்கள் உற்சாகமாகி ஒட்டகத்தில் ஏறி அமர்வதும் வீடியோவில் உள்ளது. மேலும் ஓட்டக டிரைவர் தனக்கு இது தான் தொழில் என்றும் பாலைவனத்தில் சிக்கியவர்களை மீட்கும் உபர் ஓட்டக டிரைவர் தான் என்றும் தெரிவிக்கிறார். வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெட்செட் துபாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்த இந்த வீடியோவில் உபரில் ஒட்டக சவாரிக்கு புக் செய்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இது AED 50.61, அதாவது ரூ. 1,163 க்கு ஒட்டக சவாரி சென்றதாக காட்டுகிறது. துபாய்- ஹட்டா சாலை அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ள நிலையில், உபரில் ஒட்டக சவாரியா என பலரையும் வியக்க வைத்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இதற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர் நீங்கள் பாலைவனத்தின் நடுவில் இருப்பது போல் தெரியவில்லை! உங்களுக்குப் பின்னால் உள்ள சாலையை மட்டுமே நாங்கள் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்.
ஒட்டகச் சவாரிக்கு முன்பதிவு செய்வது “விலங்கு இழைக்கும் கொடுமை” என்பதைத் தவிர வேறில்லை என்று ஒருவர் கூறினார். மற்றொருவரோ நிஜமோ இல்லையோ, செம்மையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். வீடியோவின் நம்பகத்தன்மையைப் பொருத்தவரை, பல பார்வையாளர்கள் இது போலியானது என்று கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ இது விளம்பர நோக்கத்துடனோ அல்லது கவனத்தை ஈர்க்கவோ செய்திருக்கலாம் என தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.
.