துல்கர் சல்மான் படங்கள் போன்று என்னுடைய படமும் பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அதற்கான வசதி என்னிடம் இல்லை என்று மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்து மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற ‘பணி’ திரைப்படம் தமிழில் நவம்பர் 22 தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை அபிநயா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், “100 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பணி’. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை தமிழ் மக்களிடம் கொண்டு வந்துள்ளோம். தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதால், நம்பி வந்துள்ளேன். துல்கர் சல்மான் படங்கள் போன்று என்னுடைய படமும் பான் இந்தியா படமாக வெளியிட ஆசை உள்ளது. ஆனால், அதற்கான வசதி என்னிடம் இல்லை.
வில்லன் என்றால் உருவத்தில் இல்லை, குணத்தில் தான் இருக்கிறது. அது என் கருத்து. அதனால் தான் இந்த இரண்டு சிறுவர்களை வில்லனாக நடிக்க வைத்தேன். துணை நடிகர்கள், கதாநாயகி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் எடுப்பதற்கு முன்பு நாங்கள் நடித்து பார்த்துக் கொள்வோம். அதனால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.
6 நாட்களில் நடைபெறும் கதைதான் இந்த திரைப்படம். பொதுவாக ஒரு படத்துக்கு தேவையான கதையை உருவாக்கி படமாக எடுத்துள்ளோம். இந்த படத்தில் இயக்குனர் தான் வெற்றி பெற்றுள்ளார். நானே இயக்கி நானே நடித்துள்ளேன். அதில் இயக்குனர் தான் வெற்றி பெற்றுள்ளார் என்று நான் நினைப்பேன்.
தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது ‘பணி’ படம் சிறப்பாக வந்துள்ளது என மணிரத்னம் சார் கூறினார்.
கார்த்திக் சுப்புராஜ் படம் நன்றாக வந்தது என்று கூறினார். அதேபோன்று இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடல் பணம் வாங்காமல் செய்து கொடுத்தார். எல்லோருக்கும் நன்றி.” என்று பேசினார்.
.