Last Updated:
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘சொர்கவாசல்’ திரைப்படத்தில், விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மன் பெயருக்கு இழுக்கு.
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில், அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், தயாரிப்பாளர் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியானது ‘சொர்கவாசல்’ திரைப்படம். திரையில் வெளியாகி பின், கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘சொர்கவாசல்’ திரைப்படத்தில் விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாயுடு, நாயக்கர் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் பாரத் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘சொர்கவாசல்’ திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் எனப் பெயர் வைத்து, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு காட்சி அமைத்து, அந்தக் கதாபாத்திரம் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது போலவும் சித்தரித்துள்ளனர். இதன் மூலம், வீரபாண்டிய கட்டபொம்மன் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும், எனவே திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை மத்திய தணிக்கை வாரியம், காவல் துறைத் தலைவர் உள்ளிட்டோர் பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
January 06, 2025 2:55 PM IST