நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் போல, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா- நடிகை ஷோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையும் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவும் சமந்தாவும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், இருவரும் அண்மையில் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் நாகசைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதாவுக்கும் கடந்த ஆகஸ்ட்டில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த ஜோடிக்கு வரும் 4 ஆம் தேதி திருமணம் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் இருந்து திரளான நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அண்மையில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியிருந்தது. இதே பாணியில் நாக சைதன்யா- ஷோபிதா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா திருமண நிகழ்ச்சிக்கு மிக முக்கிய பிரபலங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது போலவே, நாக சைதன்யா திருமணமும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
.