Last Updated:

நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி கடந்த நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. இதனால் 2024ஆம் ஆண்டில் வங்கியின் தங்க இருப்பு அதிகரித்தது.

News18

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்களுடைய கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டன. உலகம் முழுவதும் அதிகரித்து காணப்படும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக, குறிப்பாக தங்கம் கொள்முதல் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக தங்க கவுன்சிலின் (WGC) அறிக்கையின்படி உலகிலுள்ள மத்திய வங்கிகள் கடந்த நவம்பரில் சுமார் 53 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி கடந்த நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. இதனால் 2024ஆம் ஆண்டில் வங்கியின் தங்க இருப்பு அதிகரித்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பு 876 டன்களாக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை மொத்தம் 73 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

இதன் மூலம் தங்கம் வாங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கி போலந்துக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளி விவரங்களின்படி, போலந்து நேஷனல் பேங்க் 2024-ல் அதிகபட்சமாக 90 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு, சில மத்திய வங்கிகளுக்கு விலைமதிப்பற்ற தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்ற கூடுதல் உந்துதலை அளித்திருக்கலாம் என்று WGC அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளைப் போலவே, இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதி வாங்கி வருகிறது. பணவீக்கத்திற்கு எதிராக நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதையும், குறிப்பாக புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் நிச்சயமற்ற காலங்களில், வெளிநாட்டு நாணய மதிப்பு சார்ந்து ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதையும் தங்கம் வாங்கி குவிக்கும் நடவடிக்கையின் முதன்மையான நோக்கமாக உள்ளது. WGC புள்ளி விவரங்களின்படி 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வாங்கிய தங்கத்தின் அளவை விட ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்: சேமிக்கவும் செய்யலாம்… டேக்ஸ் ஃபெனிபிட்டும் கிடைச்ச மாதிரி ஆச்சு…!

இதனிடையே ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் வங்கி (PBoC) மீண்டும் தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளது. அதன் இருப்பில் ஐந்து டன் தங்கத்தைச் சேர்த்துள்ளது. இதன் மூலம், ஆண்டு முதல் இன்று வரையிலான நிகர கொள்முதலை 34 டன்களாகவும், அதன் மொத்த தங்க இருப்பு 2,264 டன்களாகவும் (மொத்த இருப்பில் 5 சதவீதம்) அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய வங்கிகளால் செய்யப்பட்ட இந்த பெரிய அளவிலான தங்க கொள்முதல் உலக சந்தையில் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளது.

தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பு இப்போது 890 டன்களாக உயர்ந்துள்ளது. இதில் 510 டன் இந்தியாவில் உள்ளன. ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை இங்கிலாந்து வங்கி மற்றும் Bank of International Settlements-ன் பாதுகாப்பில் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு நாக்பூர் மற்றும் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உலகின் உயரமான போர்க்களம் சியாச்சினில் தடம் பதித்த ரிலையன்ஸ்… முதல் டெலிகாம் நிறுவனமாக சேவை தொடக்கம்

நாட்டில் போதுமான உள்நாட்டு சேமிப்பு திறன் இருந்த காரணத்தால் ரிசர்வ் வங்கி 2024-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள வங்கி சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவில் உள்ள அதன் சொந்த சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.



Source link