Last Updated:
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அஸ்வின்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலகில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அஸ்வின்.
இதையும் படிக்க: காபா டெஸ்ட் போட்டி டிரா – மோசமான வானிலையால் இரு அணிகளும் முடிவு!
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டி இன்று டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்த அறிவிப்பை அவர் வெளியிடும்போது, “இதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எனது கடைசி நாளாக இருக்கும். எனக்குள் இன்னும் ஒரு கிரிக்கெட்டர் இருக்கிறார். அதை நான் உள்ளூர் போட்டிகளில் தான் இனி காட்ட முடியும்.
இதுவரை ரோகித் சர்மா உள்ளிட்ட எனது சக வீரர்களுடன் நான் நிறைய நினைவுகளை உருவாக்கியுள்ளேன். அவர்களில் பலரை கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்துள்ளேன். நாங்கள் தான் கடைசி ‘OG’ களாக இருப்போம் என நினைக்கிறேன். இத்தனை நாள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிசிசிஐக்கும் எனது சக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.
ரோகித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்யா, புஜாரா உள்ளிட்டோர் ஸ்லிப்களில் பிடித்த கேட்ச்களால் தான் நான் இவ்வளவு விக்கெட் எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார். அஸ்வினின் ஓய்வை அறிவித்ததும், ரோகித் சர்மா சற்று வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ஆரத்தழுவி வழியனுப்பினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 18, 2024 12:18 PM IST